பழநி கோயில் ரூ.100 கோடி நிலப் பத்திரப் பதிவு விவகாரம்: விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான, சுமார் 1.40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், கடந்த ஜூலை 6-ம் தேதி சட்ட விரோதமாக இரு தனிநபர்களுக்குப் பத்திரப் பதிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில், விதிகளை மீறிப் பதிவு செய்ததாக பழநி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகியோர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இந்த முறைகேடான பத்திரப் பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினர் வழக்கு ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு தங்களது விசாரணையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர். நேற்று மாலையே பழநிக்குச் சென்ற சிபிசிஐடி போலீஸார், சர்ச்சைக்குரிய மடத்தின் நிலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், தேவஸ்தான மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அடுத்த இரு தினங்களுக்கு பழனியிலேயே முகாமிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் அழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த நிலப் பதிவு மோசடி குறித்துத் தனியாக ஆய்வு செய்யப் பதிவுத் துறை சார்பிலும் கூடுதல் பதிவுத் துறைத் தலைவர் தலைமையில் 3 பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், பத்திரப் பதிவு நடந்த நாளில் பணியில் இருந்த மற்றும் விடுப்பில் சென்ற அதிகாரிகள், பணியாளர்களிடம் விரிவான விசாரணை நடத்தவுள்ளனர். மேலும், சார் பதிவாளர் அலுவலகத்தில் அன்றைய தினம் பதிவான கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகப் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

AthibAn Tv