"ஊழல் புகாரில் சிக்கினால் பதவி பறிக்கப்படும்" - அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

Dina AthibAn
0

"ஊழல் புகாரில் சிக்கினால் பதவி பறிக்கப்படும்" - அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின் 2-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகள், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் மிகவும் கண்டிப்பான மற்றும் நேரடியான சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், தவெக அரசு முற்றிலும் ஊழலற்ற வெளிப்படையான அரசாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். "அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் மற்றும் முறைகேடு புகார்கள் வராதபடி நிர்வாகத்தைப் பலப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் மற்றும் துறைகள் தொடர்பாக ஊழல் புகார்கள் எழுந்து, அது உறுதியானால் சம்பந்தப்பட்ட அமைச்சரைத் தயக்கமின்றிப் பதவியிலிருந்து நீக்குவேன். தெரிந்தவர், தெரியாதவர் எனப் பார்க்காமல் தவறு செய்தவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும். நமக்கு அமைச்சர்களை விட, நம்மை நம்பித் தேர்ந்தெடுத்த மக்களே முக்கியம்" என்று அவர் கண்டிப்புடன் எச்சரித்துள்ளார்.

மேலும், சமீபகாலமாக அமைச்சர்களின் ஆய்வுகள் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். "அமைச்சர்கள் தங்களது துறைகள் மற்றும் பொறுப்பு மாவட்டங்களில் ஆய்வு நடத்தலாம். ஆனால், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில் தேவையற்ற ஆய்வுகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்குச் சென்று சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' போன்ற விளம்பர நோக்கிலான பதிவுகளை வெளியிடுவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மேடைகளில் பேசும் பேச்சுகளோடு நின்றுவிடாமல், நேர்மையான நிர்வாகத்தை மக்கள் உணரும் வகையில் அமைச்சர்கள் தங்களின் செயலில் காட்ட வேண்டும்" என்றும் முதல்வர் விஜய் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!