"முதல்வர் விஜய், உதயநிதி தேர்தல் வழக்குகளை அவசரமாக விசாரிக்க முடியாது" - உச்ச நீதிமன்றம் அதிரடி!
தமிழக முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மக்கள் பிரதிநிதிகளின் வெற்றியை எதிர்த்து மொத்தம் 54 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், மரிய வில்சன் மற்றும் தோல்வியுற்ற முன்னாள் அமைச்சர்களான அன்பில் மகேஷ், பெரியகருப்பன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளும் அடங்கும்.
இந்த வழக்குகளை அவசரமாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 54 தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், இவற்றை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், "தமிழகத்தில் 54 தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதா? அங்கு மொத்தம் எத்தனை தொகுதிகள் உள்ளன?" என்று வினவினார். அதற்கு 234 தொகுதிகள் இருப்பதாக மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரும் இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் தாராளமாக சென்னை உயர் நீதிமன்றத்தையே அணுகலாம் என்று அறிவுறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

AthibAn Tv