அண்டை மாநிலங்கள் போல தமிழக உணவகங்களில் 'ரெஸ்டோ பார்' அமைக்க அனுமதி வழங்க அரசு பரிசீலனை!

Dina AthibAn
0

அண்டை மாநிலங்கள் போல தமிழக உணவகங்களில் 'ரெஸ்டோ பார்' அமைக்க அனுமதி வழங்க அரசு பரிசீலனை!

ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களைப் போன்று, தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களின் உணவகங்களிலும் (ஹோட்டல்கள்) 'ரெஸ்டோ பார்கள்' செயல்பட அனுமதி வழங்குவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசு, பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து, அதற்குப் பதிலாக உரிமம் பெற்ற ரெஸ்டோ பார்களை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் (FL-1), தனியார் கிளப்புகள் (FL-2) மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு (FL-3) மட்டுமே மதுபான உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மது வழங்க வேண்டிய சில தனியார் கிளப்புகள், விதிமீறிப் பொதுமக்களுக்கும் உணவுடன் மதுபானம் வழங்கி வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை ஒழுங்குபடுத்தும் விதமாக, பொழுதுபோக்குச் சங்க உரிமங்களுக்குப் பதிலாக ரெஸ்டோ பார்களுக்கென 'FLB' போன்ற புதிய தனித்துவமான உரிமங்களை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உணவகங்களில் முறையான உரிமக் கட்டணங்களுடன் தரமான சேவையை வழங்கவும், அதன் வழியே அரசுக்கான வருவாயைப் பெருக்கவும் வழிவகை செய்யப்படும் என டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!