“ராமநாதபுரம் சிறுமி உயிரிழப்பில் உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்”: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு!

Dina AthibAn
0


“ராமநாதபுரம் சிறுமி உயிரிழப்பில் உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்”: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு!

சென்னை: ராமநாதபுரத்தில் 5 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

வீட்டில் தூங்கிய குழந்தை மர்ம மரணம்:

இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் நகரில் அதிகாலையில் வீட்டில் பெற்றோர் அருகே தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி திடீரென மாயமாகி, பின்னர் பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், நெஞ்சை உலுக்கும் வேதனையையும் அளிக்கிறது.

அந்தச் சிறுமி தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாரா, அல்லது யாரேனும் கடத்திச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனரா, அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டாரா என்பது குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு திடுக்கிடும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது மிகுந்த கவலையளிக்கிறது."

"மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!" - பிரேமலதா சாடல்:

தொடர்ந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துச் சாடிய அவர், "சொந்த வீட்டிற்குள் பாதுகாப்பாகத் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கே இந்த அவல நிலை ஏற்பட்டால், பாதுகாப்பைத் தேடி மக்கள் எங்கு செல்வது? தமிழக அரசு எத்தனை 'சிங்கப் பெண்' திட்டங்களைக் கொண்டு வந்தாலும், காவல்துறை இருந்தாலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற கொடூரச் சம்பவங்களை ஏன் முழுமையாகத் தடுக்க முடியவில்லையே என்று பொதுமக்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு எப்போதுதான் கிடைக்கும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடுமையான தண்டனைக்கு வலியுறுத்தல்:

"எனவே, இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்தி மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். இந்தத் துயரமான சம்பவத்தில் தனது செல்லக் குழந்தையைப் பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் குழந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!