“அதிமுக தலைமைக்கு அடிமட்ட தொண்டர்களின் உணர்வு புரியவில்லை!”: எடப்பாடி பழனிசாமியை சாடி தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Dina AthibAn
0

“அதிமுக தலைமைக்கு அடிமட்ட தொண்டர்களின் உணர்வு புரியவில்லை!”: எடப்பாடி பழனிசாமியை சாடி தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மாமல்லபுரம்: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட அரசியல் இணைப்பு விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் (தமிழக வெற்றிக் கழகம்) இணைந்தனர். தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த், அக்கட்சியின் மூத்த தலைவர்களான அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. விழாவில் தவெக கட்சித் துண்டை அணிந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பும், பின்பும் நாங்கள் தலைமையிடம் கடுமையாக வலியுறுத்தினோம்; ஆனால் அதிமுக தலைமை அதற்குச் செவிமடுக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, எம்.ஜி.ஆரால் 'தீய சக்தி' என அடையாளம் காட்டப்பட்ட திமுகவோடு திரைமறைவில் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதில் எங்களுக்குத் துளியும் உடன்பாடு இல்லை" என்று அவர் அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.




தொடர்ந்து தவெக தலைவர் விஜய் அவர்களின் அரசியல் ஆளுமையைப் புகழ்ந்து பேசிய சி.விஜயபாஸ்கர், எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து, தமிழகத்தில் மவுனப் புரட்சியை நிகழ்த்தியவர் முதல்வர் விஜய் என்றார். தொண்டர்களைத் தோழர்களாக மதிக்கும் ஒரு தலைமையின் கீழ் இணைந்தது தங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், "தவெக வேறு, தமிழகம் வேறு அல்ல என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். வரவிருக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் தவெகவே வெற்றி பெறும். மாமல்லபுரத்தில் நீங்கள் பார்ப்பது வெறும் 'ட்ரெய்லர்' தான், இதனுடைய 'மெயின் பிக்சரை' டெல்டா பகுதியில் தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நடத்தப்படும் மாபெரும் அடுத்த இணைப்பு விழாவில் காட்டுவோம்" என சவால் விடுத்தார்.




இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "தீய சக்தியான திமுகவை ஒழிக்கவே எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கினார். ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமியின் தவறான முடிவுகளால் அந்த இயக்கம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் எல்லாம் சேர்ந்துதான் அவரைப் பொதுச்செயலாளர் ஆக்கினோம்; ஆனால் இன்று உண்மையை எடுத்துச் சொல்பவர்களை அவர் 'துரோகி' என்கிறார். ஒரு தலைவன் சரியான முடிவை எடுக்காவிட்டால் இயக்கம் எப்படி அழியும் என்பதற்கு இன்றைய அதிமுகவே சாட்சி. அடிமட்டத் தொண்டர்களின் உணர்வை எடப்பாடி புரிந்து கொள்ளவில்லை" என்று சாடினார். மேலும், கரூர் மாவட்ட அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் தவெகவில் இணைந்துள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் முதல்வர் விஜய் கரூர் வரும்போது, அங்கு மேலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் தவெகவில் இணைவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!