இபிஎஸ்-க்கு அடுத்தடுத்து இடி: "புதிய பதவிகள் வேண்டாம்!" – எஸ்.பி.வேலுமணி உட்பட 9 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அதிரடி கடிதம்; கட்சி உடைகிறதா?

Dina AthibAn
0

இபிஎஸ்-க்கு அடுத்தடுத்து இடி: "புதிய பதவிகள் வேண்டாம்!" – எஸ்.பி.வேலுமணி உட்பட 9 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அதிரடி கடிதம்; கட்சி உடைகிறதா?

சென்னை:

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆளுங்கட்சியான தவெக-வில் இணைந்த அதிர்ச்சி விலகுவதற்குள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தலைமை வழங்கிய புதிய கட்சிப் பதவிகளை நிராகரிப்பதாக அவர்கள் இபிஎஸ்-க்கு அதிரடிக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கட்சியின் முன்னணி தலைவர்களான எஸ்பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணமுரளி, எஸ்.எம்.சுகுமார் ஆகிய 9 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர். ஜூன் 25-ம் தேதி தலைமை அறிவித்த புதிய கட்சிப் பதவிகளை ஏற்க மறுப்பதாக அக்கடிதத்தில் அவர்கள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

"திமுக-வுடன் இபிஎஸ் கூட்டணி; தவெக-வை ஆதரித்த 25 எம்.எல்.ஏ-க்கள்" – கடிதத்தில் திடுக்கிடும் தகவல்!

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனுப்பியுள்ள அந்த ரகசியக் கடிதத்தில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நகர்வுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடித விவரம் வருமாறு:

"நீங்கள் (பழனிசாமி) திமுக-வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு எடுத்ததால், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைப்படி திமுக-வை எதிர்க்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இதனால், திமுக எதிர்ப்பில் உருவான தவெக அரசுக்கு 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவளிக்கும் சூழல் உருவானது. அவ்வாறு ஆதரவளித்துவிட்டு மீண்டும் கட்சியில் இணைந்த எம்.எல்.ஏ-க்களை, அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீங்கள் திடீரென விடுவித்ததால் அவர்கள் மிகுந்த மனச்சோர்வடைந்துள்ளனர்.

குறிப்பாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உங்களை முதலமைச்சராகவும், பொதுச்செயலாளராகவும் அமர வைக்கவும், கட்சியின் சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ளவும் முன்னின்ற சி.வி.சண்முகத்திற்கு எந்தப் பதவியும் வழங்காமல் ஒதுக்கி வைத்தது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. மேலும் பல முக்கிய நிர்வாகிகளுக்குப் பழைய பொறுப்புகள் வழங்கப்படவில்லை."

ஜெயலலிதா பாணியைப் பின்பற்றாத இபிஎஸ்: "தொடர் தோல்விகளால் கட்சி கரைகிறது"

கடந்த கால வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த 9 எம்.எல்.ஏ-க்களும், "முன்னதாக அதிமுக ஜெ அணி, ஜா அணி என உடைந்தபோது, மீண்டும் இணைந்தவர்களுக்கு அவர்கள் வகித்து வந்த பழைய பதவிகளையே ஜெயலலிதா வழங்கினார். அதேபோல், ஓ.பன்னீர்செல்வத்துடன் சென்ற 12 எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் வந்தபோதும் பழைய பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் நீங்கள் அந்த மரபைப் பின்பற்றவில்லை.

உங்களது தவறான முடிவுகளால் 2021, 2024, 2026 என அடுத்தடுத்துத் தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து, கட்சி கரைந்து வருகிறது. கடந்த 50 நாட்களாகத் தொண்டர்களும், நிர்வாகிகளும் விரக்தியில் கட்சியை விட்டு விலகி தவெக-வில் இணைந்து வருகின்றனர். எனவே, ஜூன் 25 அறிவிப்பின்படி தாங்கள் வழங்கிய புதிய பதவிகளை ஏற்று எங்களால் கட்சிப் பணியாற்ற இயலாது. உங்களது பதவிகள் எங்களுக்கு வேண்டாம்; நாங்கள் என்றும் சாதாரண கட்சி உறுப்பினர்களாகவே செயல்படுகிறோம்" என்று கடிதத்தில் பொங்கியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் தவெக நோக்கிப் படையெடுக்கும் சூழலில், எஞ்சியிருக்கும் கொங்கு மற்றும் வட மாவட்டங்களின் முக்கிய கோட்டைகளான வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 9 எம்.எல்.ஏ-க்களும் இபிஎஸ்-க்கு எதிராகத் திரும்பியிருப்பது அதிமுக-வை முழுமையாக உடைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!