“நெல் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல்!”: விருதுநகர் மாவட்ட அரசு கொள்முதல் நிலையங்கள் மீது விவசாயிகள் பரபரப்பு புகார்!

Dina AthibAn
0

“நெல் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல்!”: விருதுநகர் மாவட்ட அரசு கொள்முதல் நிலையங்கள் மீது விவசாயிகள் பரபரப்பு புகார்!

விருதுநகர்: தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கட்டாயமாக லஞ்சப் பணம் வசூல் செய்யப்படுவதாக விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளின் நலனுக்காக மாவட்டம் முழுவதும் 37 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,545 மற்றும் மோட்டா ரகம் குவிண்டாலுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வெளிச்சந்தையை விட அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோவுக்கு 6 ரூபாய் வரை கூடுதலாக விலை கிடைப்பதால், பெரும்பாலான விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை அரசு மையங்களுக்கே கொண்டு வருகின்றனர். இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கொள்முதல் மையப் பணியாளர்கள், 40 கிலோ எடையுள்ள ஒவ்வொரு மூட்டைக்கும் கட்டாயப் பணம் கேட்டு கறாராக வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு லஞ்சப் பணம் தர மறுக்கும் ஏழை விவசாயிகளிடம், "நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது; கல், மண் கலந்துள்ளது" எனப் பல்வேறு காரணங்களைக் கூறி, நெல்லை எடை போடாமல் வேண்டுமென்றே அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்துப் பேசியுள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகள், "விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் முதல்போக சாகுபடியில் சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் என்று கணக்கிட்டாலே, இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் 40 லட்சம் ரூபாய் வரை சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் கணக்கிட்டால், ஒரு பருவத்திற்கு விவசாயிகளிடமிருந்து பல நூறு கோடி ரூபாய் லஞ்சமாகச் சுருட்டப்படுகிறது. தற்போதைய முதல்வர் விஜய் அவர்கள் கடந்த காலங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலிப்பதைக் கண்டித்து கடுமையான அறிக்கைகளை வெளியிட்டார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் முந்தைய ஆட்சிகளைப் போலவே இப்போதும் பணம் வசூலிப்பது வேதனையளிக்கிறது. முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.

மறுபுறம், இப்புகார்கள் குறித்து நெல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் தங்களின் நடைமுறைச் சிக்கல்களைப் பட்டியலிட்டனர். "அரசு கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களைக் கொண்டே இயக்கப்படுகின்றன. எங்களுக்கு நிரந்தர ஊதியம் கிடையாது, கொள்முதல் அளவைப் பொறுத்துக் கமிஷன் மட்டுமே தரப்படுகிறது. மேலும், மையங்களின் தினசரிச் செலவுகளுக்காக அரசு தர வேண்டிய 20 ஆயிரம் ரூபாய் முன்வைப்புத் தொகை முறையாக வழங்கப்படுவதில்லை; தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மூட்டைக்கு 10 ரூபாய் கூலியும் போதுமானதாக இல்லை. நெல் சேமிப்பின் போது ஏற்படும் எடைக்குறைவு மற்றும் சேதங்களுக்குப் பணியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதால், வேறு வழியின்றி விவசாயிகளிடம் பணம் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அரசு இந்த உள்கட்டமைப்புச் சிரமங்களைச் சரிசெய்தால் நாங்கள் பணம் வாங்கப் போவதில்லை" என்று அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!